Posted in Bible, Verse Explanation

கர்த்தரை நாம் எப்படி தேடவேண்டும்?

நாம் வேதத்தில் சாலமோன் எழுதிய உன்னதப்பாடல்கள் வாசித்திருப்போம். மேலோட்டமாக அதை வாசித்தால், ஒரு பெண் தன் மணவாளனை தேடுவதும், பின் மணவாளன் தன்னை வெளிப்படுத்துவதும், அதன்பின் அவர்கள் திருமணம் செய்து கொள்வதும் மட்டுமே நமக்கு தெரியும். அவர்களிடையே நடைபெறும் உரையாடல்களை பாடல் வருணனையுடன் இப்புத்தகம் அமைந்திருக்கிறது.

இந்த புத்தகத்தை நாம் ஆழ்ந்து வாசித்தால், அதிலே எப்படி சூலமத்தி என்கிற ஒரு பெண் தன் மணவாளனை தேடுகிறாளோ, அது போல நாம் கர்த்தரை தேட வேண்டும் என்கிற ஒரு அருமையான சத்தியத்தை தேவன் அதிலே பதித்து வைத்துள்ளார்.

1. தகுதி தேவையில்லை

நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன் – உன்னதப்பாட்டு 1:5

நாம் எப்படிப்பட்டவர் என்பது தேவன் பார்ப்பதில்லை.  நம்மில் அநேகர்,  நான் எதற்கும் உதவாதவனாக இருக்கிறேனே, யாரும் நேசிக்காத உருவத்தில் இருக்கிறேனே, எதையும் ஞானமாக செய்ய தெரியாதே போன்ற நம்மை பற்றிய ஒரு தாழ்வு மனப்பான்மையாக எண்ணிக்கொள்கிறோம். கர்த்தர் தனக்கு காணிக்கையை அதிகமாக கொடுக்கிறவர்களை தான் நேசிப்ப்பார், என்னை கண்டுகொள்ளமாட்டார், நான் ஒரு பாவியான மனுஷன் போன்ற தவறான கற்பனைகள் இருக்கிறது.

கர்த்தர் பட்சபாதமுள்ள தேவன் அல்ல. அவரே நம்மை அவ்வாறு சிருஷ்டித்திருக்கிறார். அவர் தன் குமாரனை நீதிமான்களுக்கென்று அனுப்பாமல் பாவிகளுக்காகவே அனுப்பினார். ஆகையால் நாம் தேவனிடம் கிட்டி சேர ஒரு தகுதியையும் தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கவில்லை, உணமையாக அவரை நேசிக்க வேண்டும் என்பதை மட்டுமே நம்மிடம் கேட்கிறார்.

2. கடமைகளிலே தவறிவிடக்கூடாது

நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள் – உன்னதப்பாட்டு 1:6

நான் கர்த்தரை தேட போகிறேன் என்று சொல்லி, நமக்கு கொடுக்கப்பட்ட மனைவி, பிள்ளைகள், பெற்றோர் என எல்லோரையும் விட்டு வனவாசம் சென்றுவிடக்கூடாது. அதனை தேவன் எதிர்பார்க்கவில்லை.

ஏனோக்கு என்னும் மனிதனை பற்றி நாம் ஆதியாகமம் 5:22ல் வாசித்தால், அவன் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான் என்பதாக. அவன் உலக கடமைகளையும் சரியாக முடித்து, தேவனிடத்திலும் உண்மையாக இருந்தான்.

3. உண்மையாக தேட வேண்டும்

இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை. நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை. நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள்: என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன். நான் அவர்களை விட்டுக் கொஞ்ச தூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன். – உன்னதப்பாட்டு 3:1-4

ஒரு காதலி தன் காதலனை எப்படி தேடுகிறாளோ, அல்லது ஒரு காதலன் தன் காதலியை எப்படி தேடுகிறானோ, அதுபோல நாம தேவனை தேட வேண்டும் என்பதை இந்த வரிகளிலிருந்து கற்கலாம்.

ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ? – லூக்கா 15:8

உலக வேலைகள், கடமைகள், தேவைகள் இருக்கத்தான் செய்யும். அதற்காக நாம் தேவனை தேட மறந்துவிடக்கூடாது. நேரமில்லை என்று சொல்வது ஒரு மூடத்தனம். அதே போல் தேவன், எனக்கு அநேக ஜனங்களை பார்க்க வேண்டியுள்ளது, உன்னை கவனிக்க எனக்கு நேரமில்லை என்று சொல்லி, நீ அவரை நோக்கி கூப்பிடும்போது அவர் சொன்னால் என்னவாகும்?

உலகத்தில் அழிந்து போகின்ற ஒரு பொருள் தொலைந்தால், அந்த பொருளுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நாம் தேடுகிறோம்? அப்பொழுது, நம்மை படித்து, நம்மை பாதுகாத்து, நம்மை போஷித்து, நம்முடைய தப்பிதங்களை மன்னித்து, நமக்காக தன் விலையேறப்பெற்ற இரத்தத்தையே தந்து நம்மை நேசிக்கும் நம் நேசர் இயேசு கிருஸ்துவை நாம் எப்படியாக தேட வேண்டும்?

4. ஆயத்தம் தேவை

என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது. என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால், என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை. – உன்னதப்பாட்டு 5:5,6

நாம் தேவனை தேடுவதில் ஒரு ஆயத்தம் வேண்டும். நாம் ஒரு திருமணத்திற்கு போக வேண்டும் என்றால், நாம் எப்படியாக நம்மை ஆயத்தப்படுத்திக்கொண்டு செல்கிறோம்? ஒரு தலைவரை பார்க்க சென்றால், என்னவெல்லாம் செய்கிறோம்? அவரிடம் என்ன பேச வேண்டும், எதை பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்படி மறுமொழி கொடுக்க வேண்டும் என்றெல்லாம் நாம் யூகித்து தயார்படுத்திக் கொண்டு செல்கிறோம். அதே நாம் தேவனிடத்தில் போவதற்கு நாம் நம்மை ஆயத்தப்படுத்துவதில்லை.

உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும், தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள். எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.  அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள். திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள். அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் – லூக்கா 12:35-40

எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். – எபேசியர் 6:18

5. ஒருவரும் பிரிக்க முடியா பிணைப்பு

திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும். – உன்னதப்பாட்டு 8:7

நாம் தேவனிடத்தில் கொண்டிருக்கும் அன்பினை ஒருக்காலும் பிரிக்க முடியாததாக இருக்க வேண்டும். ஒருவன் தன்னுடைய சொத்தையெல்லாம் நான் உனக்கு தந்துவிடுகிறேன், தேவனை மட்டும் விட்டு வந்து விடு என்று சொன்னதும் பணத்திற்காக, உலகத்திற்காக நாம் நம்மை உண்டாக்கினவரை மறுதலித்து போய்விடக்கூடாது.

கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். – ரோமர் 8:36-39

இப்படியாக இந்த உன்னதப்பாடல்கள் புத்தகத்தில் தேவன் சில கருத்துக்களை பதித்து வைத்துள்ளார். நாம் எந்த சூழலிம் நம் தேவனை விட்டு விடாதிருப்போமாக. அவரை தேடுவதில் அதிக முக்கியத்துவம் கொடுப்போமாக. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!!

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s